தேர்தல் வந்தாலே அதிமுகவில் களையெடுக்கும் பணிகள் சூடுபிடிக்கும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னர் சாட்டையை கையிலெடுத்த ஜெயலலிதாவால் பல முக்கிய அமைச்சர்களின் தலை உருண்டது அனைவரும் அறிந்ததே.
ஜெயலலிதாவை பொருத்தவரை அவரது கவனத்துக்கு ஒரு புகார் சென்றால் போதும் நடவடிக்கை என்பது உடனடியாக இருக்கும். தேர்தல் வந்தாலே கூடவே புகார்களும் சேர்ந்து வரும். வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக தலைமைக்கு கட்சியினர் பற்றி பல புகார்களும் வருவதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 180 முதல் 190 இடங்களில் வெற்றி பெறும் என அதன் தலைமை எதிர்பார்த்ததாம். ஆனால் கட்சியில் இருந்து கொண்டு சிலர் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதால் தான் அதிமுகவின் வெற்றி தொகுதி 134 தொகுதியாக குறைந்ததாக அதிமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட கட்சியினர் தொடர்ந்து கட்சியில் இருந்தால் அது அதிமுகவின் வெற்றி விகிதத்தை உள்ளாட்சி தேர்தலிலும் பாதிக்கும் என்பதால், அவர்களை களையெடுக்கும் பணியில் ஈடுபட ஜெயலலிதா தயாராகி வருவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த களையெடுப்பில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள், கரூரில் உள்ள முக்கிய அதிமுக புள்ளி மேலும் பலரின் தலை உருளும் என கூறப்படுகிறது.