Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கை, கால்கள் அசைக்க முடியாத நிலையில் ஜெயலலிதா அறிவுரை வழங்கினாரா?: ராமதாஸ்

Advertiesment
கை, கால்கள் அசைக்க முடியாத நிலையில் ஜெயலலிதா அறிவுரை வழங்கினாரா?: ராமதாஸ்
, புதன், 12 அக்டோபர் 2016 (19:42 IST)
கைகளும், கால்களும் அசைக்க முடியாத நிலையில் முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எப்படி அறிவுரை வழங்கியிருக்க முடியும்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவதால், இதுவரை அவர் கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்பு மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 166(3) பிரிவின்படி, முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசியலமைப்புச் சட்டத்தின் 166(3) ஆவது பிரிவின்படி, அரசின் நிர்வாகப் பணிகள் எளிதாக நடைபெறுவதற்கு வசதியாக அமைச்சர்களின் துறைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால், முதல்வரின் அறிவுரைப்படி மட்டுமே இந்த மாற்றங்களை ஆளுநரால் மேற்கொள்ளப்படும். ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வரின் அறிவுரைப்படி தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
 
எனினும், ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா எந்த முறையில் அறிவுரை வழங்கினார் என்பது தான் தமிழகத்திலுள்ள ஏழரை கோடி மக்களின் மனதில் எழுந்துள்ள வினாவாகும். வழக்கமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் போது, அதற்கான அறிவுரைக் கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் வழங்குவார்.
 
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்போது எந்த வகையிலும் ஆளுநருக்கு அறிவுரை வழங்கும் நிலையில் இல்லை என்பது தான் அவர் மருத்துவம் பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டு வரும் மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரியவரும் உண்மை ஆகும்.
 
ஜெயலலிதா மிக மோசமான நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை மருத்துவர்கள் தவிர வேறு எவரும் சந்திக்க முடியாத நிலை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவிடம் நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற போதிலும், எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
 
மேலும், முதல்வருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும், மயக்க நிலையிலேயே இருப்பதாலும் அவரால் பேச முடியாது. அதுமட்டுமின்றி, அவருக்கு பாசிவ் பிசியோதெரபி (Passive Physiotherapy) செய்யப்படுவதால் அவரது கைகளும், கால்களும் அசைக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய நிலையில் இருக்கும் ஒருவரால் அறிவுரை வழங்கி கையெழுத்து போடுவதோ, தாம் நினைப்பதை தெரிவிப்பதற்காக சைகை காட்டுவதோ சாத்தியமில்லை. இத்தகைய சூழலில் முதல்வர் எப்படி அறிவுரை வழங்கியிருக்க முடியும்?
 
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யும் உரிமை அக்கட்சிக்கு உண்டு. அக்கட்சியைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் முதல்வராகவோ, பொறுப்பு முதல்வராகவோ நியமிக்கப்படலாம். அதை தீர்மானிக்க வேண்டியது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான்.
 
ஆனால், அவை அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடைபெறவேண்டும் என்பது தான் பாமகவின் நிலை. மாறாக, அரசியல் சட்டத்திற்கு எதிரான வகையில், இந்த நடைமுறைகளுக்கெல்லாம் சம்பந்தமில்லாத சிலர் தங்களின் விருப்பப்படி அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைக்க ஆளுநரும் இடமளித்துவிடக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
 
இதற்கெல்லாம் மேலாக பொறுப்பு மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. எனவே, தம்மிடம் உள்ள துறைகளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கும்படியும், அமைச்சரவையை தலைமையேற்று நடத்த அனுமதிக்கும்படியும் ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு அறிவுரை வழங்கினார் என்பதை தமிழக ஆளுநர் விளக்க வேண்டும். இதுகுறித்த விளக்கம் அளிக்கப்படும் வரை தமிழகத்தில் நடைபெறுவது ஐயத்துக்குரிய ஆட்சியாகவே மக்களால் பார்க்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கேரளாவில் பரபரப்பு’ - நாளை முழு அடைப்பு போராட்டம்!