தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டதால், கர்நாடக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அங்கு வாழும் தமிழர்களின் மீதும் தமிழர்களின் உடைமைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதனால், அங்கு வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறத்தது முதல் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் வாழும் கர்நாடக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக டி.ஜி.பி. இடம் வலியுறுத்தினேன். தமிழகத்தில் விவசாயிகள் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பில் அமைதியாக சட்டபூர்வமாக போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் கர்நாடக மக்கள் மற்றும் அவர்களின் உடமைகள் மீது பெரிய அளவில் எந்தவொரு தாக்குதலும் நடைபெறாமல் பாதுகாப்பு அளித்து வருகிறோம்.
சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் இரண்டு சிறிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் தமிழ் பேசும் மக்கள் மற்றும் அவர்களது உடைமைகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது மிகவும் கவலை அளிக்கிறது. கர்நாடகாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.