Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும் : ராமதாஸ்

Advertiesment
தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும் : ராமதாஸ்
, ஞாயிறு, 19 ஜூன் 2016 (19:09 IST)
ஆக்கப்பூர்வ அரசியல் செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
சென்னையில் நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழக நலன் சார்ந்த 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கி வலியுறுத்தியதற்காக தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
பொதுவாக அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடந்தால் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், மீதமுள்ளவை அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இருக்கும். இந்த செயற்குழு கூட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. வழக்கம் போலவே ஜெயலலிதாவைப் பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அதன் தலைவரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுவது இயற்கையானது தான். ஆனால், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு ஜெயலலிதா எந்த அளவுக்கு மக்கள் பணியாற்றினார் என்பதை அறிந்துகொள்வது மக்களின் உரிமை.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 14ஆம் தேதி தில்லியில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அவற்றில் மொத்தமுள்ள 29 கோரிக்கைகளில் சென்னையில் மழை - வெள்ள பாதிப்புகளை சரி செய்ய கூடுதல் நிதி தேவை, நீர்நிலை ஓரங்களில் வாழும் மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்காக நிதி ஒதுக்க வேண்டும், கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளைத் தவிர மீதமுள்ள 26 கோரிக்கைகள் ஏற்கனவே பிரதமர்களிடம் அளிக்கப்பட்டுள்ள மனுக்களில் இடம் பெற்றிருந்தவை தான்.

2011-ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன்சிங்கிடமும், 2014, 2015 ஆம் ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியிடமும் அளிக்கப்பட்ட மனுக்களில் ஒருசில திருத்தங்களை மட்டும் செய்து புதிய கோரிக்கை மனுவாக ஜெயலலிதா அளித்துள்ளார். மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் பிரதமரை சந்தித்து, மாநிலத்தின் நலனுக்கான கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கமாகும். இச்சடங்கை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார் என்பதைத் தவிர, பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பில் எந்த சிறப்பும் இல்லை; மக்கள் நல நோக்கமும் இல்லை.
 
பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கிய மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளில் பல காலம்காலமாக இருந்து வருபவை ஆகும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவற்றைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்று வினா எழுப்பினால் எதுவும் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். உதாரணமாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் ஜெயலலிதா கோரியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி 9 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டில் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் தான் இப்போதும் உள்ளது. இதற்கு இடையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் தமக்குத்தாமே பாராட்டு விழா நடத்தி, ‘பொன்னியின் செல்வி’ என்ற பட்டம் வழங்கிக் கொண்டது மட்டும் தான் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையாகும்.

2014 ஆம் ஆண்டில் நரேந்திரமோடி அரசு பதவியேற்றவுடன், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் மனு அளித்தார். அதையேற்ற மத்திய அமைச்சர் உமாபாரதி 2014 ஆம் ஆண்டு ஜுலை இறுதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இம்முடிவை மத்திய அரசு கைவிட்டது. அந்த நேரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் 2 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அதை செய்ய ஜெயலலிதா தவறிவிட்டார். இதுதான் உழவர் நலனில் அவருக்குள்ள அக்கறை.
 
மீனவர்கள் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் கடந்த 5 ஆண்டுகளில் 52 மாதங்கள் முதல்வராக இருந்த ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 44 முறையும், பிரதமர் மோடிக்கு 35 முறையும் கடிதம் எழுதினார். 8 மாதங்கள் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 13 முறை கடிதம் எழுதினார். முதலமைச்சராக இருந்த 15 ஆண்டுகளில் ஜெயலலிதா எத்தனை முறை பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாரோ, அத்தனை மனுக்களிலும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெற்றிருந்தது. எனினும், இதுவரை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதற்குக் காரணம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஜெயலலிதா உண்மையான அக்கறை காட்டவில்லை என்பது தான். பல விஷயங்களில் அதிமுகவின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப்படும் நிலையில், ஜெயலலிதா நினைத்திருந்தால் மத்திய அரசுக்கு கடும் நிபந்தனைகளை விதித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், அவரது நோக்கம் அதுவல்ல என்பது தான் உண்மை.

தேசிய அளவில் ஆறுகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் காவிரி -குண்டாறு, தாமிரபரணி - திருமேனியாறு உள்ளிட்ட தமிழகத்திற்குள் பாயும் நதிகள் இணைப்புத் திட்டம் 8 ஆண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இத்திட்டங்களில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுவது ‘‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவதாக கூறினானாம்’’ என்ற பழமொழியைத் தான் மக்களுக்கு நினைவூட்டுகிறது.
 
முல்லைப் பெரியாற்று அணை விவகாரம், கல்வி பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான சிக்கல்கள், மின் திட்டங்கள், உழவர்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள், மத்திய வரி வருவாயில் தமிழகத்தின் பங்கை அதிகரித்து வழங்குதல், உணவுப் பாதுகாப்புத் திட்டம், திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பெரும்பாலான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு லேசான அழுத்தம் தருவதன் மூலம் நிறைவேற்றக் கூடியவை தான்.

ஆனால், பிரதமரை சந்திக்கும்போது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக ஜெயலலிதா நினைத்துக் கொள்கிறார். முந்தைய திமுக ஆட்சியிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, கலைஞர் எழுதும் கடிதங்களை அனுப்ப அவரது வீட்டிலேயே ஒரு அஞ்சல் நிலையத்தை அமைக்கலாம் என்று கிண்டல் செய்தார். ஆனால், அப்போது கலைஞர் செய்ததைத் தான் இப்போது இவர் செய்துகொண்டிருக்கிறார்.
 
தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுமானால் முதலமைச்சராக இருப்பவருக்கு போர்க்குணம் தேவை. தமிழகத்தின் முக்கியக் கோரிக்கைகள் குறித்து பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் அடிக்கடி நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அதற்குப் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தயக்கம் காட்டினால் அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் தந்திரத்தை அறிந்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்த குணங்கள் எதுவும் கிடையாது. மாறாக தம்மை சுற்றி வளைத்துள்ள சொத்துக் குவிப்பு உள்ளிட்ட ஊழல் வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.
 
கடந்த ஆண்டில் பிரதமர் மோடியும், அதற்கு முந்தைய ஆண்டில் நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்கு வந்து சந்தித்துப் பேசினர். நாடாளுமன்றத்தில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அதிமுகவின் ஆதரவை பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அந்த நேரத்தில் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் அரசுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று ஜெயலலிதா நிபந்தனை விதித்திருந்தால் கோரிக்கைகள் நிறைவேறியிருக்கும். ஆனால், ஜெயலலிதாவோ தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்துவதை விடுத்து, சொத்து வழக்கிலிருந்து தம்மை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தான் ஜெயலலிதா.
 
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரியக் கட்சியாக உருவெடுத்துவிட்டதாக பெருமை பேசும் அதிமுக, அதன் எம்.பி.க்கள் வலிமையை வைத்து இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதைவிடுத்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது, மனு கொடுப்பது, அதற்காக வெற்று பாராட்டு மாலைகளை தமக்குத் தாமே சூட்டிக் கொள்வது உள்ளிட்ட உத்திகள் மக்களை ஏமாற்றும் வித்தையாக பார்க்கப்படுமே தவிர ஒருபோதும் பயனளிக்காது. இதை உணர்ந்து இனிவரும் நாட்களிலாவது ஆக்கப்பூர்வ அரசியல் செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்ல நண்பரை இழந்து விட்டேன் : ஜேப்பியர் மரணம் குறித்து கமல்ஹாசன் வேதனை