கடந்த செப்.22ம் தேதி இரவு போயஸ்கார்டன் வீட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியான தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய களப்பணியில், செப்.22ம் தேதி இரவு 10. 10 மணியளவில் அப்போலோ மருத்துவர்கள் குழு போயஸ்கார்டன் வீட்டில், மயங்கிய நிலையில் இருந்த ஜெ.வின் உடல் நிலையை பரிசோதித்த போது, சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 140/70 ஆகவும், 72 ஆக இருக்க வேண்டிய இதயத்துடிப்பு 80 ஆகவும், 120 எம்.ஜி.ஆக இருக்க வேண்டிய சர்க்கரை அளவு, அதிக பட்சமாக 508 ஆக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, அவரது உடலில் ஆக்சிஜன் அளவு வெறும் 48 ஆக இருந்துள்ளது. 90க்கு கீழே சென்றால் கூட மூச்சு தினறல் ஏற்படும் என்பது மருத்துவர்களின் கருத்து.
இவை அனைத்தும், அப்போலோவில் ஜெ. அனுமதிக்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதோடு, செப்.22ம் தேதி முந்தைய 3 நாட்களிலும் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு நிமோனியா காய்ச்சல், நுரையீரல் தொற்று, இரத்த அழுத்தம் ஆகியவை இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெ.வின் உடல்நிலை அதற்கு முன்பு ஏன் கண்காணிக்கப்படவில்லை என்பது குறித்து பல்வேரு கேள்விகள் எழுந்துள்ளது. முக்கியமாக சர்க்கரையின் அளவு 508 ஆக இருந்துள்ளது. அது மிகவும் அதிகம். அதேபோல், ஆக்சிஜன் அளவு வெறும் 48 மட்டுமே இருந்துள்ளது. அது அபாயகராமனது.
இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவரும், மருத்துவருமான தமிழிசை சவுந்தராஜன் “ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 508 எம்.ஜி அளவுக்கு சென்றது எப்படி? கடைசியாக எப்போது அவரின் சர்க்கரை அளவு சோதிக்கப்பட்டது? அதைக் கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், போயஸ் கார்டனில் உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டிருந்தால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்த போது “ ஜெயலலிதா, 2, 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதேபோல், அவரின் கை, கால்கள் வீக்கமாக இருந்தது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில், அதை முன்பே ஏன் கட்டுப்படுத்தப்பட வில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.