மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப். 22ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் போயஸ்கார்டன் வீட்டில் என்ன நடந்தது என்பது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை ஜெ.வின் விவகாரம் தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது. அவரின் இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஜெ.வின் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று, செப்.22ம் தேதி ஜெ.வின் இல்லத்தில் என்ன நடந்தது என்கிற களப்பணியை நடத்தி முடித்துள்ளது. அதில், பல்வேறு விவரங்கள் தெரிய வந்துள்ளன.
அதாவது, ஜெ.வின் உடல் நிலை சரியில்லை என போயஸ் கார்டன் வீட்டிலிருந்து செ.ப்.22ம் தேதி இரவு 10 மணிக்கு தொலைப்பேசி அழைப்பு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளது. 10.01 மணிக்கு 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடனடியாக போயஸ் கார்டனுக்கு விரைந்தது.
மருத்துவர்கள் போயஸ் கார்டன் வீட்டை அடைந்த போது, வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் ஜெ. மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை எழுப்ப மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவரால் எதுவும் பேச முடியவில்லை.
அப்போது அவரது உடல் நிலையை மருத்துவர்கள் சோதித்துள்ளனர். அதில், சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 140/70 ஆக இருந்துள்ளது. அதேபோல், 72 ஆக இருக்க வேண்டிய இதயத்துடிப்பு 80 ஆக இருந்துள்ளது. மேலும், 120 எம்.ஜி.ஆக இருக்க வேண்டிய சர்க்கரை அளவு, அதிக பட்சமாக 508 ஆக இருந்துள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அவரது உடலில் ஆக்சிஜன் அளவு வெறும் 48 ஆக இருந்துள்ளது. 90க்கு கீழே சென்றால் கூட மூச்சு தினறல் ஏற்படும் என்பது மருத்துவர்களின் கருத்து.
இதையடுத்து, 10.15 மணியளவில் அவரை ஏற்றிக் கொண்டு, ஆம்புலன்ஸ் அப்போலோ விரைந்துள்ளது. சரியாக 10.25 மணிக்கு அவர், கீழ் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அப்போது அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. இவை அனைத்தும், அப்போலோவில் ஜெ. அனுமதிக்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அதோடு, செப்.22ம் தேதி முந்தைய 3 நாட்களிலும் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு நிமோனியா, காய்ச்சல், நுரையீரல் தொற்று ஆகியவை இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.