Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலை உயர்வை தமிழக அரசு தட்டி கேட்கும்... ஜெயகுமார் பேட்டி!

விலை உயர்வை தமிழக அரசு தட்டி கேட்கும்... ஜெயகுமார் பேட்டி!
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (11:39 IST)
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசிற்கு தமிழக அரசு வலியுறுத்தும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

 
சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க ஆட்சியில் கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்ததாகவும், ஆனால் அ.தி.மு.க அரசு ஆக்கப்பூர்வமான விஷயங்களில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.
 
மேலும், சமூக நீதிக்கான அரசு என்பதை எடுத்துரைக்கும் வகையில் சுமார் 87 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதியோர் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான நிதியை ஒதுக்கி சமூக நலத்திட்டங்களை வழங்கியுள்ளதாக கூறிய அவர், இன்று தண்டையார்பேட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட 88 நபர்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
 
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மக்களின் உணர்வு பூர்வமான விஷயம் என்றும், மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு விலை குறைப்பிற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்,  
தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
 
VAT வரி பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதை மீண்டும் குறைத்தால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் அரசு கவனம் செலுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என்றும்,காங்கிரஸ்-தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு 5 ஆயிரம் கோடி VAT நிலுவைத் தொகை இழப்பு ஏற்பட்டதாகவும், அதை வாங்கித் தர அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? எனவும்  கேள்வி எழுப்பினார்.
 
சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் அதனை பசுமை பண்ணை அங்காடியில் வைத்து விற்பனை செய்வது தொடர்பாக கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
 
விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி ஜாதி, கட்சி பாகுபாடின்றி விவசாயிகளுக்கென அ.தி.மு.க அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்றும், யார் யாருக்கு எவ்வளவு தொகை சென்று சேர்ந்துள்ளது என்பதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட யார் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம் எனவும், இதன் மூலம் பலனடையும் 16 லட்சம் விவசாயிகளின் ஆதரவும் அ.தி.மு.க அரசுக்கு கட்டாயம் இருக்கும், மீண்டும் அ.தி.மு.க அரசு ஆட்சியை அமைக்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கிலோ கறிவேப்பிலை 100 ரூபாயா? – மதுரையில் அதிர்ச்சி!