கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர்கள் கல்குவாரிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர்களான கல்குவாரிகள் அமைந்துள்ள கரூர் மாவட்டம் தென்னிலை, புன்னம்சத்திரம், பவித்திரம், காருடையாம்பாளையம் உள்ளிட்ட சுமார் 9 இடங்களில் திருச்சி மண்டல வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முதன் முதலில் சிக்கியதும் கல்குவாரியின் வருமானவரித்துறையினரின் சோதனை மூலமாக தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே கல்குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வரும் வருமானவரித்துறையினர், கரூர், கோவை ரோட்டில் உள்ள வசந்தம் நகரில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர் அலுவலகத்திலும் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடைய உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களது வட்டாரம் என்பதினால் அ.தி.மு.கவினர் மத்தியில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.