Publish Date: Wed, 29 Nov 2017 (12:18 IST)
Updated Date: Wed, 29 Nov 2017 (19:00 IST)
இன்று இரவு முதல் சென்னையில் கனமழை பெய்யும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்பின் அதன் வலு குறைந்து போனது. அந்நிலையில், கடந்த 24ம் தேதி வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்தது. அதோடு, இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் கடந்த 27ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கன்னியாகுமாரி கடற்கரைப்பகுதிக்குள் நகர்வதால், ஈரப்பதம் ஏற்பட்டு சென்னையில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 30ம் தேதி வரை மழை பெய்யும் எனவும், சென்னையில் டிசம்பர் 1ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.