சென்னை டி.எம்.எஸ் மருத்துவ இயக்குநகரம் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு 11,000க்கும் மேற்பட்டோர் செவிலியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளை கடந்தும் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வேண்டி கடந்த சில மாதங்களாக செவிலியர்கள் போராடி வருகிறார்கள்.
செவிலியர்களின் கோரிக்கைக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை செவிலியர்கள் டி.எம்.எஸ் வளாகத்தில் தங்களது போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் செவிலியர்கள் வந்துள்ளனர்.
செவிலியர்கள் திடீரென வளாகத்தில் இருந்து வெளியே வந்து சாலையில் போராட முயற்சித்தனர். இதனால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் போராட முயன்ற செவிலியர்களை காவல்துறையினர் சிறை பிடித்தனர்.
பெண் காவலர்கள் அந்த பகுதியில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செவிலியர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்க 10000க்கும் அதிகமானோர் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து வருகின்றனர்.