Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம மோகன் ராவ் கைதில் கொடுமை என்னவென்றால்.... - கேவலப்படுத்தும் ஸ்டாலின்

Advertiesment
ராம மோகன் ராவ் கைதில் கொடுமை என்னவென்றால்.... - கேவலப்படுத்தும் ஸ்டாலின்
, வெள்ளி, 23 டிசம்பர் 2016 (10:22 IST)
ராம மோகன் ராவ் கைதில் கொடுமையானது, ஊழல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதி வழங்கும் மாநில விஜிலென்ஸ் ஆணையர் பதவியிலும் இதே ராம்மோகன ராவ் நீடித்திருந்தார் என்பது தான் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மோசமான முன்னுதாரணம் படைத்த ராமமோகன் ராவ் ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சஸ்பெண்ட் நடவடிக்கைக்குள்ளாகி, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் ஐ..ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை.

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை தலைமைச் செயலாளர் பி.ராம்மோகன் ராவ் வீட்டில் நடந்திருக்கின்ற வருமானவரித்துறை ரெய்டு பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. அதை விடக் கொடுமை, ஊழல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதி வழங்கும் மாநில விஜிலென்ஸ் ஆணையர் பதவியிலும் இதே ராம்மோகன ராவ் நீடித்திருந்தார் என்பது தான்.

அதே போல், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறைக்கு டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த தலைவர் பதவி அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டு இன்றளவும் ஐ.ஜி. தலைமையிலான பதவியில் அந்த துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐ.ஜி. தலைமையில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறையால் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவரின் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் மீதோ, ஊழல் புகார்கள் மீதோ நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க, ஊழல்களை ஒழிக்கும் பணியில் மிக முக்கியமான அமைப்பான “லோக் அயுக்தா” அமைப்பை அமைக்க அதிமுக அரசு இதுவரை முன்வரவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் தலைமைச் செயலாளரின் வீட்டில் ரெய்டின் ஒரு பகுதியாக தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலேயே நடத்தப்பட்ட ரெய்டால் அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்திற்கு இருந்த மாண்பு இன்று சிதைந்து நிற்கிறது.

தலைமைச் செயலகம் என்பது ஆளுநர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் என அரசியல் சட்ட அதிகாரம் படைத்த அனைவரும் பணியாற்றும் வகையில் அமைந்துள்ள இடமாகும். அங்கே ரெய்டு நடத்தப்பட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் உகந்தது அல்ல எனினும் இந்த ரெய்டின் போது மத்திய போலீஸார் (துணை ராணுவத்தினர்) பாதுகாப்பு அளித்ததன் மூலம், தமிழக காவல்துறையின் மதிப்பு, மரியாதையையும் இந்த அதிமுக ஆட்சி சீர்குலைத்து விட்டது. உயர்ந்த பொறுப்பில் இருப்போர் பணியாற்றக்கூடிய தலைமைச் செயலகத்தில் துணை ராணுவத்தின் பாதுகாப்போடு மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

ரெய்டில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் தமிழக அரசின் கருவூலங்களுக்கு வந்தவையா, இந்த புது ரூபாய் நோட்டுக்கள் மூலம் ஆள்வோர் குவித்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுக் கட்டுகள் கைமாற்றப்பட்டுள்ளதா என்ற நியாயமான சந்தேகமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் தனது மவுனத்தைக் கலைத்து பதிலளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தார் போல் மாநில விஜிலென்ஸ் ஆணையர் பதவி மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு துறைக்கு தலைவர் பதவி ஆகியவற்றிற்கு ஆறு வருடங்கள் முழு நேர ஊழியர்களை நியமிக்காமல் வைத்திருந்ததைப் பார்க்கும் போது அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட “அரசு ஆலோசகர்கள்” பதவியே அர்த்தமற்றதாகியிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகின்ற அந்த அரசு ஆலோசகர்கள் எல்லாம் ஊழலைத் தடுக்க வேண்டிய இந்த நடவடிக்கைகள் குறித்து ஏன் ஆலோசனை வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே ராம்மோகன ராவ் ஐ.ஏ.எஸ். மீதான ரெய்டு குறித்த தகவல்கள் அனைத்தையும் எவ்வித தாமதமும் இன்றி மாநில அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த ஊழலில் தொடர்புடைய “மேல்மட்ட” தலைவர்களும் எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது. மாநிலத்தின் மாண்புக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இந்த சோதனைகள் குறித்து தமிழக முதல்வர் விரைந்து விரிவான அறிக்கையின் மூலம் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோண்டி எடுக்கப்படுமா ஜெயலலிதா உடல்? இடம் மாறுகிறதா சமாதி?: அதிர்ச்சி தகவல்!