Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்! - திருச்சியில் அமைச்சர் KN நேரு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து!

Advertiesment
Ishaa

Prasanth Karthick

, ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (22:08 IST)

ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை’ முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் KN நேரு அவர்கள் சந்தித்து  வாழ்த்து தெரிவித்தார். 

 

 

ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன. 

 

அந்த வகையில் முதல் கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர்.  இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில்  மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர். 

 

இதில் திருச்சி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் KN நேரு அவர்கள் வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான KPY பாலா, வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கிராமத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

 

திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டிகளை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் துவங்கி வைத்தார். இதில் பிரபல நகைச்சுவை நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதே போல் கோவையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகருமான ரக்‌ஷன் பங்கேற்றார். 

 

வேலூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை கலைஞர் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மதுரையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உதவி ஆணையர் திரு. ராஜேஷ்வரன்  பரிசுகள் வழங்கினார். அதோடு சேலத்தில் நடைபெற்ற போட்டிகளில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். 

 

இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் சிலம்பம், வள்ளி கும்மி, படுகர் நடனம், மயிலாட்டம், மாடு ஆட்டம், அறுவடை ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும், பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையாட்டுகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

 

மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வான அணிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

 

கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது.

 

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர், மேலும் கிராமங்களில் சாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை, இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வாரத்தில் 40 பேர், ஓராண்டில் 569 பேர் சிறைபிடிப்பு, நிரந்தரத் தீர்வு எப்போது? அன்புமணி கேள்வி..!