குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை: தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன்? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கீழான கடைசி கல்வியாண்டு இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு உருவாக்கி 2020-ஆம் ஆண்டில் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வி உள்ளிட்ட வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அது மாணவர்களின் இடை நிற்றலுக்கு வழி வகுக்கும் என்பதால் அதை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசு, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாறாக தமிழகத்தின் சூழலுக்கு பொருந்தும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று 2022-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது; அதே ஆண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
நீதியரசர் முருகேசன் குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால் உடனடியாக அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து மாநிலக் கல்விக் கொள்கையை இறுதி செய்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் புரியவில்லை.
மாநிலக் கல்விக் கொள்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், அதன் மீது தமிழக அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படாவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை; அதை குப்பையில் தான் போட்டாக வேண்டும். இதற்காகவா மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாயை செலவு செய்து மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு தயாரித்தது?
மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடாமல் இருக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும் மாநிலக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தாமதிக்கிறது என்றால், தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கும். இப்போதும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது இந்த ஐயம் உறுதியாகிறது.
மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தான் திமுக அரசின் நிலைப்பாடு என்றால், ஓராண்டாகியும் வரைவு அறிக்கையை வெளியிடாதது ஏன்? மாநிலக் கல்விக் கொள்கை எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு உடனடியாக விடையளிக்க வேண்டும்.