Publish Date: Tue, 23 Jan 2024 (11:26 IST)
Updated Date: Tue, 23 Jan 2024 (11:28 IST)
கோவை குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை உலா வருவதாக கிராம மக்கள் கூறியதை அடுத்து, வனத்துறை ஊழியர்கள் தானியங்கி புகைப்படக் கருவியை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கோவை, மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை காவல் சுற்றுக்கு உட்பட்ட கோவை குனியமுத்தூர் கிராம பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி வனத்துறை ஊழியர்கள், குனியமுத்தூர் ஜே ஜே நகர், அபிராமி நகர், M.S.அவன்யூ, M.S.பார்க், K.M.R.நகர், M.S.கார்டன் மற்றும் செங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்தனர். அதில் எந்த ஒரு கால் தடமும், தடயங்களும் ஏதும் தென்படவில்லை.
இதை அடுத்து சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயங்களை கண்காணிக்க தானியங்கி புகைப்பட கருவி (camera trap) பொருத்தி தொடர் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறனர்.