Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசால் பட்டா வழங்கப்பட்ட பூர்வகுடி மக்களை அரசே விரட்டத் துடிப்பதா? - சீமான் கண்டனம்!

Advertiesment
அரசால் பட்டா வழங்கப்பட்ட பூர்வகுடி மக்களை அரசே விரட்டத் துடிப்பதா? -   சீமான் கண்டனம்!
, வெள்ளி, 22 டிசம்பர் 2023 (15:28 IST)
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட, விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பகுதியில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் வீடுகளை இடித்து, திமுக அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்களை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி அகற்ற முற்படுவது கொடுங்கோன்மையாகும்.

நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே ஆவடி விளிஞ்சியம்பாக்கம் அருகிலுள்ள பாரதிதாசன் நகரில் வாழ்ந்து வந்த 60 குடும்பங்களைச் சேர்ந்த உழைக்கும் பழங்குடி மக்களுக்கு, விடுதலைக்கு பிறகு கடந்த 1965 ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா பக்தவச்சலம் அவர்களால் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

தற்போது மூன்று தலைமுறைகளை கடந்து 172 குடும்பங்களாக, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கு செலுத்தி வாழ்ந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும். திராவிட திருவாளர்கள் அம்மக்களிடம் கடந்த 60 ஆண்டுகளாக வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள், இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா?

காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், தனியார் நிலவிற்பன்னர்களுக்கு திமுக அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்கத் திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் சமத்துவமா? சமூக நீதியா? இதற்கு பெயர்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? என்ற கேள்விகள் எழுகிறது.

ஆகவே, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட, விளிஞ்சியம்பாக்கம் - பாரதிதாசன் நகர் பகுதியில் கடந்த மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ் தொல்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்களை திமுக அரசு முற்றாகக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வானிலை மையத்தை கொச்சைப்படுத்தவில்லை.. அன்புமணி ராமதாஸ் விளக்கம்..!