மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிபங்கீடு, வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அன்று ஸ்ரீ நகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இப்பயணத்தின்போது,ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து அவர் முதன் முறையாக இப்பகுதிக்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. எனவே பிரதமர் செல்லும் வழியில் உள்ள பள்ளிகள் புதன் மற்றும் வியாழக்கிழமை மூடப்பட்டதாகவும் தேர்வு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து தமிழ் நாடு அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளதாவது;
''மோடி அவர்களின் வருகைக்காக பள்ளி மாணவர்களுக்கான தேர்வை தள்ளி வைக்கலாம். மோடி அவர்களின் கௌரவத்தை காப்பாற்ற கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டிக்கு, நிபுணர்களின் பரிந்துரைக்கு மதிப்பளிக்காமல், இந்திய அணிக்கு பிட்ச் சாதகமாக இல்லாத அகமதாபாத் மைதானத்தை தேர்வு செய்யலாம். மோடி அவர்களின் பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்று G20 மாநாட்டின் போது குடிசை பகுதிகளை பச்சை போர்வை போர்த்தி மூடலாம். அவ்வளவு ஏன், மோடி பிறந்தநாளில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன என்று சொல்லி பெருமைப்படுவதற்காக அந்நாள் வரை தடுப்பூசிகளை பதுக்கி மக்களின் உயிரோடு விளையாடலாம்.
கடந்த பத்து வருடங்களாக ஒன்றிய அரசு ஒரே ஒரு மனிதரின் பிம்பத்தை கட்டி எழுப்பத்தானே பாடுபடுகிறது?'' என்று விமர்சித்துள்ளார்.