சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அம்மாவட்ட பாமக எம்.எல்.ஏக்கள் புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. சமீபத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தனித்து போட்டியிட முடியாத அளவு வலுவிழந்து இருப்பது குறித்து கடுமையாக பேசியுள்ளார்.
இந்நிலையில் நேற்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்த நிலையில் விழாவில் கலந்து கொண்ட பாமக எம்.எல்.ஏக்கள் திமுக ஆட்சியில் மக்கள் குறைகள், கோரிக்கைகள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், துண்டு சீட்டில் கோரிக்கை எழுதி கொடுக்கப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படுவதாக பாராட்டி பேசியுள்ளனர். முன்னதாக தமிழ் புத்தாண்டு விவகாரத்திலும் பாமக நிறுவனர் ராமதாஸ், திமுகவுக்கு ஆதரவாக பேசி இருந்தார். இதனால் பாமக அதிமுக கூட்டணியிலிருந்து மொத்தமாக விலகி திமுகவுடன் நெருக்கம் காட்ட முயல்கிறதா என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுப்பு எழுந்துள்ளது.