சென்னை – பெங்களூரு இடையே செயல்பட்டு வரும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் உள்ளிட்ட சாமானிய பயணிகளையும் ஈர்க்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இந்திய ரயில்வேயின் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் என பலவகை ரயில் சேவைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பயணிகளை வெகுவாக கவர்வது சென்னை – பெங்களூர் இடையேயான டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ்.
டபுள் டக்கர் பேருந்துகளை போல இரண்டு தளம் கொண்ட இந்த ரயில் முழுவதும் ஏசி வசதிக் கொண்டது. இந்த ரயில் சென்னையிலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணாராஜபுரம் வழியாக பெங்களூர் செல்கிறது.
வெளிநாடுகளில் உள்ளது போன்று முற்றிலும் குளிரூட்டபட்ட சேர் கார் பிரிவு கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். விலையும் அதிகம். வசதி படைத்தவர்கள் மட்டுமே பயணிக்கும்படி அல்லாமல் சாமானியர்களும் டபுள் டக்கரில் பயணிக்கும் வகையில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் இடையே நிலவி வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த டபுள் டக்கர் ரயிலில் ஏசி வசதி இல்லாத 5 சாதாரண பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 15 பெட்டிகளுடன் இந்த ரயில் இன்று முதல் பயணிக்கும் என கூறப்பட்டுள்ளது. டபுள் டக்கரில் முன்பதிவில்லா பெட்டிகள், ஏசி வசதி இல்லாத இருக்கை பெட்டிகள் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.