கடலூர் அருகே மாசி மக கோவில் திருவிழா நடத்தும் பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பதில் அதிமுக திமுக தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது
கடலூர் முதுநகர் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தில் மாசி மக திருவிழாவையொட்டி கிராமத் தலைவர் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி முன்னதாக சத்தியமூர்த்தி என்பவர் கிராம தலைவராக இருந்து வந்துள்ளார். அவரின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கிராம தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து இன்று ஊர் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் நடைபெற்றது.
இதில் அதிமுகவை சேர்ந்த தேவதாஸ் என்பவரும், திமுகவை சேர்ந்த அன்பு என்பவரும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரில் அதிமுகவை சேர்ந்த தேவதாசிற்கு அதிகளவு பொதுமக்களின் ஆதரவு இருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் திமுகவை சேர்ந்த அன்பு என்பவர் தனக்கும் அதிக ஆதரவு இருப்பதாகவும் கூறியதால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி பின்னர் கைகலப்பாக மாறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க முந்தைய தலைவரே மாசி மக திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் திருவிழா முடிந்த பிறகு வருவாய் துறையினர் முன்னிலையில் பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.