Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு.! தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.! ராமதாஸ் கண்டனம்..!!

ramdoss

Senthil Velan

, செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:05 IST)
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று கேரளம் துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு ஆணையிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு ஆய்வு நடத்துவது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
 
டெல்லியில் நேற்று நடைபெற்ற முல்லைப்பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழு கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து வல்லுனர் குழு அமைத்து ஆய்வு நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. கண்காணிப்புக்குழு அடுத்த 2 மாதங்களில் மீண்டும் கூடி வல்லுனர் குழு உறுப்பினர்களை முடிவு செய்யும் என்றும், அடுத்த ஓராண்டுக்குள் ஆய்வை முடித்து வல்லுனர் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு ஆணையிட்டுள்ளது.
 
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் வலியுறுத்தப்பட்டு, கண்காணிப்புக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்கள் அநீதியானவை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2021-ம் ஆண்டின் அணை பாதுகாப்பு சட்டத்தின்படி, பெரிய அணைகளின் பாதுகாப்பு குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதால், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்று கேரள அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதை ஏற்றுக் கொண்ட கண்காணிப்புக் குழு, முல்லைப் பெரியாறு அணையில், கடைசியாக 2011-ம் ஆண்டில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால், இப்போது மீண்டும் பாதுகாப்பு ஆய்வு நடத்த ஆணையிடுவதாக தெரிவித்துள்ளது. அணை பாதுகாப்பு சட்டத்தின் கூறுகளையும், முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆய்வு நடத்தப் பட்டு 13 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதையும் கருத்தில் கொண்ட கண்காணிப்புக் குழு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது ஆகும். 

 
எனவே, தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும். மரங்களை வெட்டி, பேபி அணையை வலுப்படுத்திய பிறகு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலை உச்சியில் இருந்தும், ஆற்றிலும் தள்ளி விடப்படும் மாடுகள் - மத்திய பிரதேசத்தில் ஏன் இப்படி செய்கிறார்கள்?