Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலை உச்சியில் இருந்தும், ஆற்றிலும் தள்ளி விடப்படும் மாடுகள் - மத்திய பிரதேசத்தில் ஏன் இப்படி செய்கிறார்கள்?

cows

Prasanth Karthick

, செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:00 IST)

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் மாடுகளை வலுக்கட்டாயமாக மூழ்கடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்துள்ளது. மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலானதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பம்ஹூர் என்ற பகுதியில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில், வெள்ளம் கரைபுரளும் ஆற்றுக்குள் மாடுகள் விரட்டப்படுவதும், அவை நீரில் அடித்துச் செல்லப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. வேகமான நீரோட்டத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்துச் செல்லும் பல மாடுகள் தடுப்பணையை நோக்கி விழுகின்றன.

 

பல மாடுகளின் கால்கள் முறிந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20 மாடுகள் ஆற்றில் தள்ளிவிடப்பட்டதாகவும், அவற்றில் ஐந்துக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

 

முழுமையான விசாரணைக்கு பின்னரே சரியான எண்ணிக்கை தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துணைப் பிரிவு காவல் அதிகாரி (எஸ்டிபிஓ) நாகவுட் விடிதா தாகர் கூறுகையில், "தெருவில் சுற்றித்திரிந்த மாடுகளை ரயில்வே பாலத்திற்கு அடியில் ஆற்றுக்குள் சிலர் தள்ளி விட்டதாக தகவல் கிடைத்தது." என்றார்.

 

மேலும், "சம்பவம் நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் அதே இடத்தில் வசிப்பவர்கள். ஒரு சிறுவன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்றார்.

 

கைது செய்யப்பட்ட பீட்டா பக்ரி, ரவி பக்ரி மற்றும் ராம்பால் சவுத்ரி ஆகிய மூவரும் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் 4/9 பசு வதைத் தடைச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சந்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 325 (3/5) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தெருவில் சுற்றித் திரிந்த மாடுகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்கவே இதைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த பகுதியில் இப்படி நடப்பது முதல் முறை அல்ல.

 

இதற்கு முன்பும், ரேவா மாவட்டத்தில், பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கீழே தள்ளப்பட்டுள்ளன. இதனால் பல மாடுகள் இறந்தன, பல மாடுகளின் கால்கள் உடைந்தன. இதுபோன்ற பல கொடூர சம்பவங்கள் இந்தப் பகுதியில் நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

அப்பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் சிவானந்த் திவேதி கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் தற்போது சகஜமாகிவிட்டன என்றார்.

 

"இயந்திரங்களின் பயன்பாட்டால் மாடு, காளைகளின் தேவை முற்றிலுமாக ஒழிந்து விட்டது. மக்கள் பசுக்களை பாலுக்காக மட்டுமே வைத்து கொள்கின்றனர். பால் சுரப்பது குறைந்ததும் மாடுகளை துரத்தி விடுகிறார்கள். தற்போது காளைகள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே மக்கள் அந்த காளைகளை விபத்துகள் நடக்கும் சாலைகளில் விட்டுவிட்டு செல்கின்றனர்" என்றார்.

 

தெருக்களில் திரியும் மாடுகளால் விபத்து

மத்தியப் பிரதேசத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. தெருக்களில் திரியும் மாடுகளால் ஏற்பட்ட விபத்துகளில் பலர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் கிராமப்புறங்களில் மாடுகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.

 

ஆகஸ்ட் 10ஆம் தேதி போபாலில் சாலையில் அமர்ந்திருந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதியதில் மென்பொறியாளர் பிரத்யுஷ் திரிபாதி உயிரிழந்தார். பிரத்யுஷ் தனது நண்பரின் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது சாலையில் இருட்டில் அமர்ந்திருந்த மாடு அவருக்கு தெரியவில்லை. மாட்டின் கொம்பு அவரின் தொடையை கிழித்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

 

போபாலைச் சேர்ந்த 60 வயதான முன்னி பாய் சோன்கர் வனத்துறையில் ஒப்பந்த ஊழியராக இருந்தார். கடந்த வாரம், வேலை முடிந்து மாலை ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த சமயம் சாலையில் எதிரே வந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, ஆட்டோ கவிழ்ந்தது. ஆட்டோவில் நான்கு பேர் இருந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். முன்னி பாய் ஆட்டோவின் அடியில் மாட்டிக் கொண்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

மாநிலம் முழுவதும் சாலைகளில் தினமும் இதுபோன்று விபத்துகள் நடக்கின்றன. ஆனால், மாநிலத்தில் பசுக்களுக்காக 1,563 பசுக் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

அங்கீகரிக்கப்பட்ட மாட்டு கொட்டகைகளின் எண்ணிக்கை 3,200க்கும் அதிகமாக உள்ளது. பல பசுக் காப்பகங்கள் இருந்த போதிலும், பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற மாடுகள் காணப்படுகின்றன. இதனால், மாடுகள் நாள்தோறும் உயிரிழப்பது மட்டுமின்றி, மக்கள் காயமடைவதுடன் பல சமயங்களில் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

 

அரசாங்கம் என்ன செய்தது?

 

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, உயர்மட்ட குழுவை அரசு இம்மாதம் அமைத்துள்ளது. ஆதரவற்று சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் பிரச்னையை சமாளிக்க 15 நாள் சிறப்பு பிரசாரத்தையும் அரசு நடத்தியுள்ளது.

 

கடந்த காலங்களிலும் அரசாங்கம் இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்த போதிலும் அவை எந்தப் பலனையும் தரவில்லை.

 

இந்த சிறப்பு பிரசாரத்தில் ஆதரவற்ற மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பெறப்படும் ஆலோசனைகள் சேர்க்கப்படும் என அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சாலைகளில் அதிகரித்து வரும் பிரச்னையை சமாளிக்க, 2,000 பேரை தன்னார்வலர்களாக நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

 

இதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, 1,000 கிராமங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில், இருவர் நியமிக்கப்படுவர். மாடுகள் மற்றும் பிற கால்நடைகள் பிரதான சாலையில் நடமாடக் கூடாது என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். இதற்காக அவர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கௌரவ ஊதியமாக வழங்கப்படும்.

 

"ஆதரவற்ற கால்நடைகள்"

மாண்டசூர் முன்னாள் எம்எல்ஏ யஷ்பால் சிங் சிசோடியா கூறுகையில், சாலைகளில் திரியும் கால்நடைகளை ஆதரவற்ற கால்நடைகளாக கருத முதல்வர் மோகன் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது "stray cattle” என்பதற்கு பதில் அவற்றை "destitute cattle" எனக் குறிப்பிட கோரியுள்ளார்.

 

யஷ்பால் சிங் சிசோடியா கூறுகையில், "இந்த பிரச்னையை சமாளிக்க, நகரங்களில் பசுக்களுக்கான சரணாலயங்கள் கட்டப்பட வேண்டும், கிராமங்களில் பசு காப்பகங்கள் உள்ளன, ஆனால் அவை நகரங்களில் இல்லாததால், சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன." என்றார்.

 

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 1.87 கோடி மாடுகள் இருப்பதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

பசு காப்பகங்களுக்கு அரசு 252 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தமுறை பட்ஜெட்டில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை பசு நலத்துக்கு அரசு மாற்றியுள்ளது. இந்த ஆண்டு, பசு வளர்ப்புக்கு வழங்கப்பட்ட 20 ரூபாயை, 40 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது.

 

மத்திய பிரதேச பசு வளர்ப்பு மற்றும் கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சுவாமி அகிலேஷ்வரானந்த் கிரி கூறுகையில், "அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.

 

மாடுகள் தொடர்பாக வாரியம் ஆய்வு நடத்தியதாகவும், இன்று குறைந்தபட்சம் பத்து லட்சம் மாடுகள் மத்திய பிரதேசத்தில் சாலைகளில் இருப்பதாகவும், அதனால் தான் இந்த நிலை உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

 

மாடுகளை பராமரிக்க அரசுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர். கிரி கூறுகையில், "முதலில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மாடுகளை அருகில் உள்ள மாட்டு கொட்டகைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன்பின், பயன்பாட்டுக்கு தகுதியற்ற மாடுகளை காட்டில் விட வேண்டும். மூன்றாவதாக, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் மாடுகளை தற்காலிக காப்பகங்களில் வைக்க வேண்டும்.

 

காப்பகங்களில் வேலி போட வேண்டும், மாடுகள் தப்பிக்க முடியாத அளவுக்கு வேலிகள் அமைக்கப்பட வேண்டும். மனித உயிர்களுக்கும் மாடுகளுக்கும் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.” என்று விவரித்தார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டாளன் என சர்ச்சை பேச்சு..! சீமானுக்கு நெருக்கடி - வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம்.!!