ராதாபுரம் அதிமுக வேட்பாளர் இன்பதுரை துன்பதுரையாகிவிட்டார் என்ற ஸ்டாலினின் கமெண்ட்டுக்கு இன்பதுரை கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வெளியிட அக்டோபர் 23 வரை தடை விதித்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பாக நின்ற அப்பாவு தான் வெற்றி பெறுவார் என்று கூறினார். பின்பு எம்.எல்.ஏ. இன்பதுரையை குறித்து பேசுகையில், மறுவாக்கு எண்ணிக்கையின் போது இன்பதுரை துன்பதுரையாகிவிட்டார் என கேலியாக கூறினார்.
ஸ்டாலினின் இந்த பேச்சு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை ‘இன்பதுரை என்ற தமிழ்ப்பெயரை கிண்டலடித்துள்ளார் ஸ்டாலின். ஸ்டாலின் என்று உங்களுக்குப் பெயர்சூட்டிய உங்கள் தந்தையின் தமிழ்ப்பற்றைவிட இன்பதுரை என்றுப் பெயர்வைத்த எனது தந்தையின் தமிழ்ப்பற்றே பெரியது’ எனக் கூறியுள்ளார்.