தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில்குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யும் திட்டத்திற்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முறையாக குடிநீர் வரி செலுத்தி வரும் பொது மக்களுக்கு அடிப்படைதேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமே தவிர, அதனை விற்பனை செய்ய திட்டமிடுவது எந்த வகையில் நியாயம். அதிமுக ஆட்சியில் அம்மா குடிநீர் விற்பனை செய்த போது தேமுதிக அதை கண்டித்தது. தற்போது ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்கும் திட்டத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேலும் தமிழக முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.