தடாகம் பள்ளத்தாக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து தீர்ப்பளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்.
கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாகவும் கனிம வள கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில், சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் அனைத்து செங்கல் சூளைகளையும் முடி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட செங்கற்களை மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அபராதம் செலுத்தி எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் 177 செங்கல் சூளைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க வலியுறுத்தியும் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூடக் கோரியும் யானை வழித்தடங்களில் உள்ள பள்ளங்களை மூட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமதிவாணன் உட்பட, மண்டல செயலாளர் அப்துல் வஹ்ஹாப், ஹிம்லர், ஸ்ரீராம், நர்மதா, கார்த்திகா, பெரியதனம் ராமச்சந்திரன், சின்னதுரை ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இதில் செய்தியாளர்களை சந்தித்த மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, தடாகம் பள்ளத்தாக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து எந்த ஒரு அரசியல் அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.