ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல்நலக்குறைவு காரணமாக கமல், ரஜினி உள்பட பல நடிகர்கள் அரசியல் களம் காணும் நிலையில் திமுக செயல் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சமீபகாலமாக அரசியல் மேடையில் தென்படுகிறார். உதயநிதியை அவரது ஆதரவாளர்கள் மூன்றாம் கலைஞரே என்றும் இரண்டாம் ஸ்டாலினே என்றும் போஸ்டர் அடித்து தங்கள் விசுவாசத்தை காட்டி வருகின்றனர். எனவே திமுகவில் அடுத்த வாரிசு களமிறங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் திடீரென அரசியலில் குதிக்கவில்லை என்றும், தான் பிறந்ததில் இருந்தே திமுகவில் இருப்பதாவும் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி மேலும் கூறியபோது, 'எனக்கு திமுகவில் எந்த பதவியும் வேண்டாம். பதவிக்காக நான் அரசியலில் திடீரென இறங்கியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். நான் பிறந்ததில் இருந்தே திமுகவில் தான் உள்ளேன்' என்று கூறியுள்ளார்.
அண்ணா ஆரம்பித்த திமுக, அண்ணாவுக்கு பின்னர் கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அப்போதில் இருந்தே கருணாநிதியின் குடும்பத்தினர்களே பெரும்பாலும் திமுகவை ஆக்கிரமித்துள்ளதாக திமுக தொண்டர்களே புலம்பு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.