இறந்த மனைவியை மறக்கமுடியாத காரணத்தால், ஒருவர் தன் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.
சென்னை தாம்பரம் அடுத்த எரும்பையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் சென்னை மாநகராட்சி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் ரேணுகா. இவருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு சதீஷ், விஜய் என்று இரு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே ரேணுகா கடந்த 2006 ஆம் ஆண்டு உடல்நிலை காரணமாக உயிரிழந்தார். ரேணுகாவின் இழப்பை மறக்கமுடியாத கணவர் ரவி, ரேணுகாவின் நினைவாக 9 க்கு 9 அடி நீளம் அகலத்தில், 16 அடி உயரத்தில் ஒரு கோவில் கட்டியுள்ளார். அந்த கோயிலுக்குள் பளிங்கு கல்லில் மனைவியின் உருவத்தை செதுக்கி ரவி மற்றும் அவரது மகன்கள் வழிபட்டு வருகின்றனர். அந்த கோவிலுக்கு ரேணுகா அம்மன் திருக்கோவில் என்று பெயர் வைத்துள்ளார்.
இது குறித்து ரேணுகாவின் கணவர் ரவி, “ எத்தனை முறை சண்டை வந்தாலும் இருவரும் ஒரு மணி நேரத்தில் சமாதானம் ஆகிவிடுவோம், ஆனால் ரேணுகா இன்று இல்லை. அவர் இறந்தவுடன் நானும் இறந்திருப்பேன், ஆனால் எனது பிள்ளைகளுக்காகத் தான் உயிரோடு இருக்கிறேன்” என நெகிழ்ச்சியாக கூறுகிறார். மேலும் இது குறித்து ரேணுகாவின் மகன் விஜய், ”எனது தாய் , சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அது முடியவில்லை.சொந்த வீட்டில் தெய்வமாக வாழமுடியவில்லை என்றாலும் கோவிலிலாவது தெய்வமாக வாழட்டும்” எனவும் கண்ணீர் மல்க கூறுகிறார்.
தனது மனைவிகளை நாளுக்கு நாள் அடித்து உதைத்து தொந்தரவு செய்யும் கணவர்கள் நிறைந்த உலகத்தில், ஒருவர் தன் மனைவிக்கு கோவில் கட்டியிருப்பது ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.