Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை?- அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு  ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை?- அன்புமணி ராமதாஸ்
, ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (10:24 IST)
சென்னை வெள்ளத்தடுப்புத் திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கை, அதன் மீதான நடவடிக்கை அறிக்கைகளை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்! என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

மிக்ஜம் புயலால் சென்னை மாநகரில் பெய்த தொடர்மழை ஓய்ந்து ஒரு வாரம் ஆகும் நிலையில் சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை. முழு இயல்பு நிலை திரும்பு விட்டதாக ஆட்சியாளர்களும், 99.50% இயல்பு நிலை திரும்ப்பி விட்டதாக தலைமைச் செயலாளரும் கூறி வருவது குரூரமான நகைச்சுவை ஆகும்.

மழைநீரும், கழிவு நீரும் சூழ்ந்த பகுதிகளில் உணவும், உறக்கமும் இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு இந்த வெற்று முழக்கங்கள் ஆறுதலை வழங்குவதற்கு பதிலாக ஆத்திரத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. அரசு நிர்வாகம் வாய்ஜாலம் காட்டுவதை விடுத்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும். சென்னையில் பெய்த தொடர்மழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் தங்களின் வாழ்நாளில் இதுவரை அனுபவிக்காத துயரங்களை அனுபவித்த மக்களுக்கு அதற்கான காரணம் இயற்கைப் பேரிடரா அல்லது அதை சமாளிக்கத் தெரியாத தமிழக அரசா? என்பதை அறிந்து கொள்ள அனைத்து உரிமைகளும் உண்டு. சென்னையில் மழை - வெள்ளத்தைத் தடுக்க திருப்புகழ் குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அரைகுறையாக மழைநீர் வடிகால்வாய்களை அமைத்ததைத் தவிர திருப்புகழ் குழுவின் எந்த பரிந்துரையையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆனால், திருப்புகழ் குழுவின் அறிக்கைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது. இது அப்பட்டமான பொய். திருப்புகழ் குழு அறிக்கை செயல்படுத்தப்பட்டதாக கூறும் அமைச்சர்களில் பலருக்கு அந்த அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்பது கூட தெரியாது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதியே திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதன் பின் 10 மாதங்களாகியும் அந்த அறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை. அதன்பின் மூன்று முறை சட்டப்பேரவை கூடியும் கூட அது குறித்து விவாதிக்கப்படவில்லை.

சென்னை மாநகருக்கான வெள்ளத்தடுப்புத் திட்டங்கள், வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, திருப்புகழ் குழுவில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நடவடிக்கை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 உலகக்கோப்பையின் இந்திய அணியில் கேப்டன் யார்? ஜெய்ஷா தகவல்