தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ’இது அதிமுக அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது’ என குற்றம் சாட்டினார். ஆனால் அதிமுகவோ ஏற்கனவே முன்னர் நடைமுறையில் இருந்த ஒரு முறையைதான் மீண்டும் கொண்டு வந்திருப்பதாகவும், இந்த மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்ததே ஸ்டாலின்தான் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதிமுக அரசு தேர்தலுக்கான பணிகளை சரியாக செய்யவில்லை எனவும், மறைமுக தேர்தலுக்கு எதிராகவும் பேசிவந்த நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ”தேர்தலை மறைமுகமாக நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடமுடியாது” என்று கூறியுள்ளனர்.
எனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவுகள் வரும் என்பதால் தேர்தலை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையே உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.