Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசைவம் சாப்பிட்டதுக்கு இந்தா இருக்கு ஆதாரம்.. பதவி விலகுங்க! - நவாஸ் கனிக்கு அண்ணாமலை பதில்!

Advertiesment
Annamalai

Prasanth Karthick

, வெள்ளி, 24 ஜனவரி 2025 (15:04 IST)

திருப்பரங்குன்றம் மலையில் எம்.பி நவாஸ் கனி அசைவம் சாப்பிட்டதை அவரே ஒத்துக் கொண்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் மலையடிவாரத்தில் முருகன் கோவில் உள்ள நிலையில், மலைமீது தர்காவும், சமணர் படுகையும் அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் தர்காவில் நடந்த நிகழ்ச்சியில் ஆடு பலியிட தடை செய்யப்பட்டதால் பரபரப்பு எழுந்தது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றே குறிப்பிடும் இஸ்லாமிய சமூகத்தார் தர்கா குறித்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், சமீபத்தில் அப்பகுதியில் உள்ள சமணர் குகைக்கு சிலர் பச்சை பெயிண்ட் அடித்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இதுகுறித்து பார்வையிட திருப்பரங்குன்றம் சென்ற ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி அங்கே மலை மீது உணவருந்தினார். அது அசைவ உணவு என தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தான் சாப்பிட்டது அசைவ உணவு அல்ல என்றும், அப்படி தான் அசைவ உணவு சாப்பிட்டதாக நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும் பேசியிருந்தார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “இரண்டு நாட்களுக்கு முன்பாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைக்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்ற, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ் கனி, ஹிந்து மக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து, அவருடன் வந்தவர்கள் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை, அவரது சமூக வலைத்தளப் பக்கத்திலேயே பகிர்ந்திருந்தார்.  பொதுமக்கள் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தற்போது அசைவ உணவு உண்டதை நிரூபித்தால், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்கிறார். 

 

அப்படிக் கூறும் காணொளியிலேயே இறுதியாக, தனது ஆதரவாளர்கள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில், அசைவ உணவு உண்டதையும் ஒப்புக்கொள்கிறார். 

 

நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கட்டுப்படுவேன் என்ற உறுதிமொழியை ஏற்று, பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற திரு.நவாஸ் கனி, அதனை முழுமையாக மீறியிருக்கிறார். மேலும், திருக்கோவில் மலையில் அசைவ உணவு உட்கொண்டதை, அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதன் ஒரே நோக்கம், ஹிந்து சமய மக்களைப் புண்படுத்துவது மட்டுமே. 

 

தான் கூறியதைப் போல, கோவில் மலையில் அசைவ உணவு உண்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று கூறியிருக்கும் நவாஸ் கனி, அவரது வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டதால், உடனடியாக அவர் பதவி  விலகுவதோடு, தமிழ் மக்களின் மனம் புண்படும்படி, முருகப்பெருமான் திருக்கோவிலை அசுத்தப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் விஜய் முக்கிய ஆலோசனை.. தவெகவில் பரபரப்பு..!