சீர்காழியில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதோடு, வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்திலேயே சீர்காழியில் 22 சென்டிமீட்டர், கொள்ளிடத்தில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து செல்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் சூழ்ந்ததுள்ளது. தென்பாதி திருவள்ளுவர் நகர் முதல் தெரு இரண்டாவது ,தெரு செல்லும் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதோடு அங்குள்ள 10 -க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வாயிலிலும் மழை நீர் தேங்கியுள்ளது. தென்பாதி தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகில் உள்ள நான்கு வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பொது மக்களே வெளியேற்றி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக மழைநீர் வடிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை, மணலூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், ஆலஞ்சேரி, மருவத்தூர், தரங்கம்பாடி, நரசிங்கநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.