இன்று முன்னாள் முதல்வரான எம்ஜிஆர் பிறந்தநாளில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர் குறித்து பேசியுள்ளார்.
இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியை தொடங்கியவருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளான இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழி சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் எம்ஜிஆர் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர், கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். ஆனால், அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று, மக்கள் தாங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு தெய்வத்தை தரிசித்தார்கள் என்றால் அது நமது பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களைத்தான், ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித் தலைவரின் ஆட்சியில்தான்.
அவர்கள் குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான். புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். புரட்சித் தலைவரின் பெரும் புகழ் இன்னும் பல்கிப் பெருகி வளரும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் மக்கள் உள்ளங்களில் மாமனிதராய், மனிதருள் மாணிக்கமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை பசுமைவழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.