துக்ளக் பத்திரிக்கையை சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி கைப்பற்றியதாக பேசப்பட்டதற்கு பதில் அளித்துள்ளார் குருமூர்த்தி.
மறைந்த பத்திரிகையாளர் சோ-வின் குடும்பத்தினரிடமிருந்து குருமூர்த்தி துக்ளக்கை கைப்பற்றியது ஏன்? என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பினார். இதற்கு தற்போது பதில் அளிக்கும் விதமாக குருமூர்த்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
யாரிடம் இருந்தும் எதையும் அபகரிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உண்மையில் 2007ஆம் ஆண்டு துக்ளக்கில் நான் சோவின் வாரிசாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. இருப்பினும் மீண்டும் 2013 ஆம் ஆண்டு நான் துக்ளக்கின் பொறுப்பை ஏற்க வேண்டும் என ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரிடம் தன்னிடம் பேசுமாறு சோ அறிவுறுத்தினார்.
அதேபோல, சோ மறைந்த அடுத்த நாள் துக்ளக்கின் மொத்தக்குழுவும் என்னை சந்தித்து பொறுப்பேற்க வலியுறுத்தியது. அதோடு தமிழகம் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை கண்டு கொண்டிருந்ததாலும் நான் அந்த பொருப்பை ஏற்றேன் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழாவின் போதும் நடிகர் ரஜினிகாந்த், சோ நமக்கு பிறகு யார் இந்த பத்திரிகையை நடத்துவார் என்று கவலைப்பட்டார். அப்போது அவர் குருமூர்த்தியிடம் கேட்டார். குருமூர்த்தி அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும் அவரை கட்டாயப்படுத்தி இந்த பொறுப்பை ஒப்படைத்தார் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.