தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டு உள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு இதில் என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் விளக்கம் கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், நிர்வாகி எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
ஒரு பேராசிரியர் 13 கல்லூரிகளில் பணியில் இருப்பதாகவும், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறப்போர் இயக்கத்தினர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.