தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்டதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசின் விளக்கத்தை ஆளுநர் கோரியுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் அறிக்கை கோரிக்கை குறித்து தமிழக அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.