தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், பண்டிகை நாட்களில் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். இதனால், அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகரிக்கிறது.
இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க அரசுப் பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அரசின் கீழ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பேருந்துகள் எந்த ஊர்களுக்கு எத்தனை முறை இயக்கப்படும் என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். மேலும், பேருந்து பராமரிப்பு பொறுப்பு தனியார் பேருந்து உரிமையாளர்களிடமே இருக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதால், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடும்.