மேற்கு வங்க அரசுடன், பயிற்சி மருத்துவர்கள் நடத்த உள்ள பேச்சுவார்த்தை தொடர்பான நேரலை ஒளிபரப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர், ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து, கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்லப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் மேற்குவங்க மாநிலத்தில் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மம்தா பானர்ஜி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், பேச்சுவார்த்தை தொடர்பான நேரலை ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது பொது நலன் கொண்ட வழக்கு என்பதால் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம் என்றும் நேரலைக்கு தடை விதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு அவகாசம் தேவைப்படுகிறது என்றும் வழக்கில் உண்மையை கொண்டு வருவதற்கு போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் குற்றங்களுக்கு உடந்தை யார்? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தது என்றும் இது குறித்து வெளியே சொன்னால் விசாரணை பாதிக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை இணையதளத்தில் இருந்து நீக்க விக்கிபீடியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.