வால்பாறையில் மக்கள் எச்சரித்தும் கேட்காமல் யானை நின்ற சாலையில் பைக்கில் சென்ற ஜெர்மனி நாட்டு பயணியை யானை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதி முக்கியமான சுற்றுலா பகுதியாக இருந்து வரும் நிலையில் வெளி மாநிலத்தவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டினரும் அதிகம் சுற்றி பார்க்க வரும் இடமாக உள்ளது. இந்த சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் யானைகளை கண்டால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி பொறுமையாக கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாடையில் யானை ஒன்று பாதையின் குறுக்கே நின்றுள்ளது. இதனால் இரு பக்கமும் வாகனங்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கெல் என்பவர் யானை நிற்பதை பார்த்தும் அதை கடக்க முயன்றார். போக வேண்டாம் என அக்கம் பக்கத்தில் இருந்தோர் எச்சரித்தபோதும் அவர் சென்றார். யானை அருகே சென்றபோது யானை தும்பிக்கையால் பைக்கை தூக்கி வீசியது.
இதில் மைக்கெல் பலத்த காயமடைந்தார். யானை அங்கிருந்து சென்றதும் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி செய்தனர். பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், யானை மைக்கெலை தாக்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.