Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்

Advertiesment
Scientists
, வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (14:03 IST)
உலகின் சிறந்த முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். வகைப்படுத்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளும் வெளியிட்ட குறைந்தபட்சம் ஐந்து ஆய்வுக் கட்டுரைகள், புலம் மற்றும் துணைப் புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் விஞ்ஞானிகளின் பட்டியலை 2% அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தப் பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில் உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இடம் பிடித்து உள்ளனர். இந்தியாவில் இருந்து 3500க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர்.
 
2022 ஆம் ஆண்டுத் தாக்கத்துக்கான பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி முனைவர் பி.பாலசுப்பிரமணியம், கணிதவியல் துறை, விஞ்ஞானி முனைவர் எம்.ஜி.சேதுராமன், விஞ்ஞானி முனைவர் எஸ்.மீனாட்சி வேதியல் துறை மற்றும் விஞ்ஞானி முனைவர் கே.மாரிமுத்து, இயற்பியல் துறை இடம் பிடித்துள்ளனர்.
 
விஞ்ஞானி முனைவர் பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளைப் பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தரப் படமாக மாற்றுதல் மேலும் கிரிப்டோகிராபி மற்றும் செயலாக்கத் தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியைக் கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். விஞ்ஞானி முனைவர் எம்.ஜி.சேதுராமன் அவர்கள் தாவர மூலப்பொருட்களில் இருந்து வரும் சேர்மங்களைக் கொண்டு உலோக அரிப்புகளைத் தடுக்கும் காரணிகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். விஞ்ஞானி முனைவர் எஸ்.மீனாட்சி அவர்கள் கழிவு நீரில் இருந்து நச்சுத்தன்மையுள்ள ஃபுளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம் மற்றும் நச்சுக்களை உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். விஞ்ஞானி முனைவர் கே.மாரிமுத்து அவர்கள் அரிதான பூமியின் தாதுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி மற்றும் லேசர் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு மற்றும் அபாயகரக் கதிர்வீச்சைத் தடுப்பதற்கான கண்ணாடிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
கடந்த 2019, 2020, 2021 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் மேற்கூறிய நான்கு பேராசிரியர்களும் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது தொடர்ந்து நான்காவது முறையாக முனைவர் பி.பாலசுப்பிரமணியம், முனைவர் எம்.ஜி.சேதுராமன், முனைவர் எஸ். மீனாட்சி, மற்றும் முனைவர் கே.மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் எழுந்துள்ள புகார்