தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை; உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 5699 கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த கல்வியாண்டில் ஏப்ரல் மாதம் வழங்கப்பட வேண்டிய ஊதியம் இன்னும் தரப்படவில்லை. வழக்கமாக மே மாதம் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. ஆனால், கடந்த மே மாதம் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. நடப்புக் கல்வியாண்டில் ஜூன் மாதத்திற்கான ஊதியம் ஜூலை 15-ஆம் நாளாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் ஏமாற்றமளிக்கிறது.
கவுரவ விரிவுரையாளர்களின் நிலை மிகவும் மோசமானது. அவர்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றினாலும், 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் நியமிக்கப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மே மாதத்திற்கு ஊதியம் கிடையாது. ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்திற்கு கூட, புதிய நிதியாண்டு பிறந்த பிறகு தான் நிதி ஒதுக்கப்படும் என்பதால் அந்த ஊதியம் ஜூன் மாதத்தில் தான் வழங்கப்படும். ஆனால், நடப்பாண்டில் ஜூலை மாதம் ஆகியும் ஊதியம் வழங்கப்படவில்லை. மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்டுபவர்களால் 3 மாதங்களாக ஊதியம் இல்லாமல் எவ்வாறு வாழ்க்கையை நடத்த முடியும்.
2023-24 ஆம் கல்வியாண்டுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்களை அமர்த்துவதற்கான அரசாணை கடந்த ஜூன் 22-ஆம் நாளே வெளியிடப்பட்டு விட்டது. அதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.125.37 கோடி நிதி ஒதுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின் ஒரு மாதம் ஆகவிருக்கும் நிலையில் இன்னும் ஊதியம் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக ஊதிய நிலுவையை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10 ஆயிரம் என்ற மாத ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த கல்வியாண்டில் தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது. அதேநேரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு நடப்பாண்டு முதல் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக 50ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், குறைந்த அளவாக சென்னை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுவதைப் போன்று மாதம் ரூ.30 ஆயிரமாவது வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.