திமுக பிரமுகர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பாலாஜி மருத்துவ கல்லூரியில் சுகன்யா என்ற மாணவி மருத்துவ படிப்பை படித்து வருகிறார். ரூ.45 லட்சம் செலவு செய்து படித்துவந்த மாணவி சுகன்யாவின் தந்தை திடீரென மரணம் அடைந்துவிட்டதால் இந்த ஆண்டுக்கான கட்டணத்தை அவரால் செலுத்தமுடியவில்லை. இந்த நிலையில் அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து தொலைகாட்சி ஒன்றில் செய்தி வெளியானது. மருத்துவக்கல்லூரியில் இருந்து சுகன்யா நீக்கப்பட்டதற்கு கல்லூரி நிர்வாகத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் ஜெகத்ரட்சகனே நேரில் அழைத்து மாணவி சுகன்யாவை மீண்டும் கல்லூரியில் சேர்த்து கொண்டார்
இந்த நிலையில் மருத்துவ படிப்பு முடியும் வரை தேவைப்படும் உபகரணங்கள், புத்தகங்கள் ஆகிய செலவுகள் முழுவதையும் தான் ஏற்று கொள்வதாக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மாணவி சுகன்யாவை நேரில் சந்தித்து கூறியுள்ளார். இது ஒரு பெரிய உதவி இல்லை என்றும் இது தனது கடமை என்றும் கூறிய ஜி.வி.பிரகாஷ், மாணவி சுகன்யா மருத்துவ படிப்பை முடித்தவுடன் ஏழைகளுக்கு சேவை செய்வதே இதற்கு அவர் காட்டும் நன்றியாக இருக்கும் என்று கூறினார்.