அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு திமுக ஆட்சியை தொடங்கிய உடனே வெளியான நிலையில் தற்போது மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை கட்டணம் இன்றி எடுத்துச் செல்லலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:”
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	மகளிர் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையில் துவக்கப்பட்ட மகளிர் திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தற்போது, சமூக பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி முறையாக பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்திசுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது
 
									
										
			        							
								
																	
	 
	 முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதல் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வருகிறார். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கான அரசு இது என்னும் வகையில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.தமிழ்நாடு துணை முதலமைச்சரும் சுய உதவிக் குழு இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டு, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காகவும், அவற்றின் முன்னேற்றத்திற்காகவும்  முதல்வரின் வழிகாட்டுதலில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வகுத்து, அவற்றை முறையாக நடைமுறைப்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
 
									
											
									
			        							
								
																	
	 
	08.03.2025 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா 2025-ல் கலந்து கொண்டு, சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கி  சிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக, நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில்,  சுய உதவிக் குழு பெண்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்“ என்று அறிவித்தார்.
 
									
					
			        							
								
																	
	 
	அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள G.O. (Ms) No. 31 – நாள் 08.03.2025-ன்படி, தமிழ்நாட்டு போக்குவரத்துத் துறையின் மூலம், அனைத்து மேலாண் இயக்குனர்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் (அ.வி.போ.கழகம் - நீங்கலாக) அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இடம் பெற்றுள்ள விபரங்கள் வருமாறு. .தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொழில் முனைவோரின் உணர்வை ஊக்குவிப்பதற்காக, சுய உதவிக்குழுக்கள் (SHGs) உறுப்பினர்கள் தங்கள் உற்பத்திப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு சந்தைகளிலும் தங்கள் சொந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். 
 
									
					
			        							
								
																	
	 
	இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும். இந்த முயற்சியில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சில சமயங்களில் மாவட்டத்திற்குள் தங்கள் விளைபொருட்களுடன் பயணிப்பதிலும், இது தொடர்பான பல்வேறு கண்காட்சிகளுக்காக மாவட்டங்களுக்கு வெளியே வரும்போதும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் மூலம் இலவச போக்குவரத்து உதவியை, பெண்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும், இது அவர்களின் சிறந்த வாழ்வாதாரத்தை ஈட்ட உதவும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
									
					
			        							
								
																	
	 
	எனவே கீழ்க்கண்ட நிலையான இயக்க நடைமுறைகளை அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்திட மேலாண் இயக்குனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
									
					
			        							
								
																	
	 
	1. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிர், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
 
									
					
			        							
								
																	
	 
	2. அனைத்து நகரப் பேருந்துகளிலும், (A/C பேருந்துகள் நீங்கலாக) உதவிக் குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை மட்டும் சுமை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
 
									
					
			        							
								
																	
	 
	3. சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளிலும், சுய உதவிக்குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை மட்டும் 100 கி.மீ வரை சுமை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
 
									
					
			        							
								
																	
	 
	4. சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல \"கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு\" நடத்துனர் வழங்க வேண்டும்.
 
									
					
			        							
								
																	
	 
	5. சுய உதவிக்குழு பெண் பயணிகள் எடுத்து செல்லும் சுமைகள் மற்ற சக பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	6.பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சுய உதவிக் குழு பெண் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	7. சுய உதவிக்குழு பெண் பயணிகள் கொண்டுவரும் சுமைகளை பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதற்காக, போதுமான நேரத்தை வழங்கி பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	8. அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	9. பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	10. சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	11.பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	12. இந்த உத்தரவு குறித்து அனைத்து பேருந்து முனையங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	13. திருப்பிச் செலுத்துதல் (Reimbursement Claim) தற்போது விடியல் பயணத் திட்டத்திற்கான திருப்பிச் செலுத்துதல் வழங்குவது போல், சுய உதவிக்குழு பெண் பயணிகளின் சுமைகளின் நகர பேருந்துகளின் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு -16 ரூபாய் மற்றும் புறநகர் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு 45 ரூபாய் வீதம் பயணச்சீட்டினை கணக்கிட்டு அதனை தணிக்கை செய்து ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் போக்குவரத்துத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	14. சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல நிலையான இயக்க நடைமுறைகளின் விளக்கத்தினை ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பயணச்சீட்டுப் பரிசோதகர்கள். நேரக்காப்பாளர்கள், கிளை மேலாளர்கள். மண்டல மேலாளர்கள் மற்றும் அனைவருக்கும் விளக்கிக் கூறி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	மேலும், சுய உதவிக்குழு பெண் பயணிகளின் சுமைகளுக்கு கட்டணமில்லா சுமை பயணச்சீட்டுகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்