கொடைக்கானலில் வரும் 8ம் தேதி மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து என வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வரும் 8ம் தேதி ஒரு நாள் மட்டும் நுழைவு கட்டணத்தை ரத்து செய்வதாக வனத்துறை அறிவித்துள்ளது. எனவே வரும் 8ஆம் தேதி மட்டும் கொடைக்கானலில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் என்றால் குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவைகளை சொல்லலாம். இந்த பகுதி அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் இங்கு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி மட்டும் கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து என்ற வனத்துறையின் அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.