வீட்டில் யார் சமையல் செய்வது என்ற சண்டையில் மாமியார் மருமகள் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த சண்டையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் வேலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வேலூர் அருகே சிங்காரவேலு என்ற பேராசிரியர் தமிழரசி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். புகுந்த வீட்டுக்கு வந்த மருமகள் தமிழரசி தனது கணவருக்கு விதவிதமாக சமைத்து கொடுக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்துள்ளார்.
ஆனால் அவரது மாமியார், தமிழரசியை சமையலறை பக்கமே விடவில்லை. இதனால் தமிழரசி மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. குழந்தை பிறந்த பின்னரும், மாமியாரே உணவு சமைத்து வந்ததால் குழந்தைகளுக்கு தேவையான உணவை கூட தமிழரசியால் சமைக்க முடியவில்லை
இந்த விவகாரம் குறித்து மாமியார் - மருமகள் இடையே அவ்வப்போது பிரச்சனை வெடித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ஆக்ரோஷமாக மோதி கொண்டனர். இதனையடுத்து தனிக்குடித்தனம் சென்றால்தான் வீட்டில் இருப்பேன் இல்லாவிட்டால் தாய் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று தமிழரசி கூறி தாய்வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது
இந்த நிலையில் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்ற தமிழரசியை சிங்காரவேலன் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் தனிக்குடித்தனம் என்பதில் தமிழரசி உறுதியாக இருந்ததால் சிங்காரவேலன் தனது வீட்டுக்கு திரும்பிவிட்டார். இந்த நிலையில் தனது கணவரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற மன வருத்தத்தில் தமிழரசி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலன் மற்றும் அவரது தாயாரை விசாரணை செய்து வருகின்றனர்.