நாமக்கல் மாவட்டத்தில் தன் மாமனாரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கணவர் மனைவியையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் அன்பு நகரைச் சேர்ந்தவர்கள் சிவப்பிரகாசம்- ரூபிகா தம்பதிகள். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வர குடும்பத்தினர் சமாதானப்படுத்தி உள்ளனர். ஒரு நாள் இதுபோல நடைபெற்ற சண்டையின் போது சிவப்பிரகாசம் தடுக்க வந்த தன் மாமனாரைத் தள்ளிவிட , அப்போது சுவரில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.
இது சம்மந்தமான வழக்கில் கைது செய்யப்பட்ட சிவப்பிரகாசம் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இதையடுத்து தனது மாமனார் வீட்டில் வசிக்கும் மனைவி ரூபிகாவை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு ரூபிகா சம்மதிக்கவில்லை. ரூபிகாவும் அவரது தாயாரும் சேர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் மனைவி மேல் ஆத்திரம் கொண்ட சிவப்பிரகாசம் அவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து கம்பியின் மூலம் மின்சாரம் எடுத்து ரூபிகாவின் அறைக்குள் விட்டுள்ளார்.
ஆனால் அறையில் வித்தியாசமாகக் கம்பி ஒன்று இருப்பதைப் பார்த்துவிட்ட ரூபிகாவின் தாயார் இது சம்மந்தமாகப் போலிஸில் புகார் செய்தார். இதையடுத்து போலிஸார் கொலை முயற்சி பிரிவின் கீழ் சிவப்பிரகாசத்தைக் கைது செய்துள்ளனர்.