தமிழக சட்டசபையில் நுழைவாயிலில் திடீரென தீ அலாரம் ஒலித்ததை அடுத்து, சட்டப்பேரவை ஊழியர்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் அச்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலக சட்டப்பேரவை வளாக நுழைவாயிலிற்கு அருகில், தீயணைப்பு துறையினரால் தீ விபத்து முன்னெச்சரிக்கைக்காக அலாரம் பொருத்தப்பட்டிருந்தது. இன்று காலை அந்த அலாரம் திடீரென ஒலித்ததால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து காவல்துறையினர் விசாரித்ததில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த அலாரம் ஒலித்தது என்பது உறுதி செய்யப்பட்டது. தலைமைச் செயலக மற்றும் சட்டப்பேரவை வளாகத்தில் எந்தவிதமான தீவிபத்து அல்லது அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் தீ விபத்து முன்னெச்சரிக்கைக்கான அலாரம் இயல்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சில நிமிட பரபரப்புக்கு பிறகு, தற்போது நிலைமை இயல்பாக உள்ளது.