தமிழ் திரைத்துறை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவராகவும் இருக்கும் விஜய்யை எதிர்த்து, இஸ்லாமிய சமுதாயத்தின் ஒருவரால் ஃபத்வா என்ற சமய கட்டளை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த "அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத்" அமைப்பின் தலைவரான மௌலானா ஷாஹாபுத்தீன் ரஸ்வி பரெயில்வி, நடிகர் விஜய் மீது இந்த ஃபத்வாவை அறிவித்துள்ளார்.
இதைப் பற்றி அவர் வெளியிட்ட தகவலில், “விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக பழகிக்கொண்டு இருக்கிறார். ஆனால், அவருடைய சில திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டு, அந்த சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளார். அதே சமயம், இஃப்தார் விருந்தில், சூதாட்டத்தில் ஈடுபடும், மது அருந்தும் சிலரை அழைத்திருந்தது நல்ல சிக்னலாக இல்லை” என விமர்சித்துள்ளார்.
இதனால், தமிழகத்தில் உள்ள சன்னி இஸ்லாமியர்கள் விஜய்யின் நடத்தை குறித்து கடும் வருத்தத்திலும் கோபத்திலும் இருப்பதாகவும், அவருக்கெதிராக ஃபத்வா அறிவிக்க வேண்டுமென அவர்கள் விரும்பியதால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் மௌலானா ஷாஹாபுத்தீன் தெரிவித்திருக்கிறார்.
அதன் பேரில், இஸ்லாமிய சமுதாயம் விஜய்க்கு எந்தவித ஆதரவும் தரக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.