வடிவேலு உள்பட பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: முக்கிய குற்றவாளி தலைமறைவு..!
நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்பட 50 பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, யூடியூப் பிரபலங்கள் கோபி சுதாகர் உள்ளிட்ட சுமார் 50 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்குவதாக சமீபத்தில் விழா நடத்தப்பட்டது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைச் சங்கம் என்ற அமைப்பு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாகவும் இந்திய அரசின் முத்திரை மற்றும் அண்ணா பல்கலைக்கழக பெயரும் இதில் இடம்பெற்று இருந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்ததை அடுத்து இது போலி டாக்டர் பட்டம் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பதாகவும் நடந்ததாகவும் இதில் நீதிபதி ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்பட்டதை அடுத்து இந்த பட்டம் உண்மையானது என்று கருதப்பட்டது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பட்டங்கள் போலி என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரிஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது.
பிப். 26ம் தேதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில்,அனைத்தும் போலியானவை என தெரிய வந்ததை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.