நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வீட்டில் ஜெராக்ஸ் மிஷின் வைத்து கள்ள நோட்டு அடித்த ஒருவர், அந்த நோட்டை காய்கறி மார்க்கெட்டில் மாற்ற வந்தபோது, பொதுமக்களால் சுற்றி வளைத்து பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியில் ஆசை தம்பி என்பவர், வீட்டில் ஜெராக்ஸ் இயந்திரம் வைத்து, கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்ததாக தெரிகிறது. அந்த நோட்டை அவர் ஒவ்வொன்றாக கடைகளில் கொடுத்து மாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் காய்கறி மார்க்கெட்டில் கத்திரிக்காய் வாங்கிய போது கள்ளநோட்டை கொடுத்தார். அதை வாங்கி பார்த்த காய்கறி கடைக்காரர், அது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்தார். இதனை அடுத்து, அங்கிருந்த கடைக்காரர்கள் அவரிடம் கேட்டபோது, தப்பிவிட முயன்றதாகவும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து, போலீசில் ஒப்படைத்ததாகவும் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் ஆசை தம்பி வீட்டில் சோதனை செய்தனர். அதில், ஒரு ஜெராக்ஸ் இயந்திரம், 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் பிற பொருட்களை கைப்பற்றினர். இதனை அடுத்து, ஆசை தம்பியை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva