Publish Date: Tue, 03 Apr 2018 (08:06 IST)
Updated Date: Tue, 03 Apr 2018 (22:21 IST)
காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வணிகர் சங்க சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டமானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.