பழங்கள் மற்றும் உணவு கழிவுகளை கான்கிரீட்டில் கலப்பதால் கூடுதல் வலிமையை பெறலாம் என இந்தூர் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கான்கிரீட் வலிமையை அதிகரிக்க ஐஐடி இந்தூர் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து வந்த நிலையில், கான்கிரீட்டில் நோய்க்கிருமி அல்லாத பாக்டீரியாவை கலப்பதன் மூலம் கட்டுமான வலிமையை இரட்டிப்பாக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவு கழிவுகள் அழுகும் போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. அதை கான்கிரீட்டில் உள்ள கால்சியம் உடன் வினை புரிய வைத்தால், துளைகள் மற்றும் விரிசல்கள் இல்லாத கான்கிரீட் கிடைக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துளைகள் மற்றும் விரிசல்கள் கான்கிரீட்டில் ஏற்பட்டால், இந்த பாக்டீரியா அதை தடுத்து நிறுத்தும் என்றும் கட்டுமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
காலிபிளவர் தண்டு, உருளைக்கிழங்கு தோல், வெந்தயத்தின் தண்டு, ஆரஞ்சு பழ தோல், அழுகிய பழ கழிவுகள் ஆகியவற்றை இந்த ஆய்வுக்காக பயன்படுத்தியதாகவும், ஆய்வு முடிவில் இந்த தகவல் உறுதியாகியுள்ளதாகவும் இந்தூர் ஐஐடி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.